செய்திகள்

பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் - ஆளுங்கட்சி பிரமுகரை பிடிக்க தனிப்படையினர் வேட்டை

Published On 2019-04-23 13:22 GMT   |   Update On 2019-04-23 13:22 GMT
பெரம்பலூரில் பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்த ஆளுங்கட்சி பிரமுகரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பொள்ளாச்சியில் பெண்களை கொடுமைப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெரம்பலூரிலும் அதே போன்று சம்பவம் நடந்துள்ளதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பல குடும்ப பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி, மிரட்டி ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர், போலி பத்திரிகையாளர் மற்றும் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வீடியோ மூலம் பதிவு செய்து வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கும்பலின் மிரட்டல்களுக்கு பயந்து தங்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ? என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் புகார் கொடுக்காமல் உள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, இந்த சம்பவங்களில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த விபரங்கள் வெளிவராமல் ரகசியம் காக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உத்தரவிட்டார்.

அதன்பேரில் பெண்களை மானபங்கப்படுத்துதல் மற்றும் பாலியல் உறவில் கட்டாயப்படுத்துதல், ஆபாச வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படையினர், பாலியல் வன்கொடுமைக்கு பெண்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படி பாதிக்கப்பட்டிருப்பின் அவர்கள் மூலம் புகார் கொடுக்க செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

மேலும் புகாரில் கூறப்பட்ட ஆளுங்கட்சி பிரமுகர் யாரென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், பெரம்பலூரிலும் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News