செய்திகள் (Tamil News)

ஷேர் ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

Published On 2019-04-17 11:14 GMT   |   Update On 2019-04-17 11:14 GMT
காலாப்பட்டில் இருந்து மரக்காணத்துக்கு ஷேர் ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு:

காலாப்பட்டில் இருந்து மரக்காணத்துக்கு தினந்தோறும் ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. அப் பகுதியை சேர்ந்தவர்கள் ஷேர் ஆட்டோவில் மரக்காணத்தில் இருந்து காலாப்பட்டுக்கும், அது போல் காலாப்பட்டில் இருந்து மரக்காணத்துக்கும் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் காலாப்பட்டில் இருந்து மரக்காணத்துக்கு செல்லும் ஒரு ஷேர் ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக காலாப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று மாலை பெரிய காலாப்பட்டு பெட்ரோல் பங்க் அருகில் இருந்து வந்த ஒரு ஷேர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு வாலிபர் ஒருவர் 2 சாக்கு பைகள் வைத்திருந்தார். அந்த சாக்கு பைகளை திறந்து பார்த்த போது, அதில் மது பாட்டில்கள் இருந்தன. மொத்தம் 130 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் அதில் இருந்தன.

இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்த மதன் (வயது 24) என்பதும், இவர் நேற்று முன்தினம் காலாப்பட்டில் உள்ள தனியார் மதுக்கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து நேற்று ஷேர் ஆட்டோவில் மரக்காணத்துக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மதனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News