செய்திகள்

காஞ்சிபுரம் அருகே பா.ம.க. நிர்வாகி உள்பட 3 பேருக்கு சரமாரி வெட்டு

Published On 2019-04-06 15:24 IST   |   Update On 2019-04-06 15:24:00 IST
காஞ்சிபுரம் அருகே பா.ம.க. நிர்வாகி உள்பட 3 பேரை அரிவாளால் சரமாரி வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளராக உள்ளார்.

இன்று காலை 6 மணி அளவில் ஜெகநாதன் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் ஜெகநாதனை சூழந்து கொண்டு அரிவாளால் வெட்டியது.

இதைப்பார்த்து ஜெகநாதன் மனைவி விஜயலட்சுமி (36), தம்பி பசுபதி (38) ஆகியோர் தடுக்க முயன்றனர். 3 பேரையும் சரமாரி வெட்டிய அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஜெகநாதனின் தம்பி உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீஸ் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ரவுடி மணிமாறன் (42), ரூ.3 லட்சம் பணம் கேட்டு ஜெகநாதனை மிரட்டியுள்ளார். அவர் கொடுக்காததால் கும்பலாக வந்து வெட்டி இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

தேர்தல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடி கும்பலை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News