செய்திகள்

யானைகவுனி நகை பட்டறையில் 6 கிலோ தங்கக்கட்டியுடன் ஊழியர் தப்பி ஓட்டம்

Published On 2019-03-30 08:10 GMT   |   Update On 2019-03-30 08:10 GMT
யானைகவுனி நகை பட்டறையில் வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் 6 கிலோ தங்கத்துடன் ஊழியர் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:

சவுகார்பேட்டையில் வசித்து வருபவர் சுபாஷ் பட்னாதர். ராஜஸ்தானை சேர்ந்த இவர் யானை கவுனியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

இங்கு சென்னையில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைகள் தயார் செய்து அனுப்பப்படுகிறது. இந்த நகை பட்டறையில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள்.

கடந்த வாரம் நகை பட்டறையில் ராஜஸ்தானை சேர்ந்த ராகுல் கவுதம் என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.

நேற்று மாலை நகை பட்டறை ஊழியர்கள் டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றனர். அப்போது ராகுல் கவுதம் 6 கிலோ தங்கக்கட்டிகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார்.

கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய ஊழியர்கள் 6 கிலோ தங்கக்கட்டிகளும், ராகுல் கவுதமும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உரிமையாளர் சுபாஷ் பட்னாதருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் யானைகவுனி போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து ராகுல் கவுதமை தேடி வருகிறார். வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் 6 கிலோ தங்கத்துடன் ஊழியர் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News