செய்திகள்

மீஞ்சூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.20 கோடி செம்மரக்கட்டை பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2019-03-21 09:04 GMT   |   Update On 2019-03-21 09:04 GMT
மீஞ்சூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். #RedSandalwood
பொன்னேரி:

3 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனைகளில், கண்டெய்னரில் கடத்தப்பட்ட 1½ டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த செம்மரக்கட்டைகள் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதில் 1½ டன் செம்மரக் கட்டைகள் மாயமாகின.

இந்த திருட்டு குறித்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாதவரம் குடோனில் திருடப்பட்ட செம்மரக்கட்டைகள் மீஞ்சூர் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு கொண்டு போகப்பட்டது தெரிய வந்தது.

இதை திருடியது தொடர்பாக பூபதி, ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி திருடப்பட்ட 1½ டன் செம்மரக்கட்டைகள் மீஞ்சூர் அருகே உள்ள கவுண்டர்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் குடோனில் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாதவரம், மீஞ்சூர் போலீசார் அந்த குடோனுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு ஏராளமான செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அங்கு 30 டன் செம்மரக்கட்டைகள் இருப்பதும், அவற்றை வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லாமல் அனுப்புவதும் தெரியவந்தது. இங்கு இருந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.20 கோடி என்று தெரியவந்தது.

அவற்றை வனத்துறை அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடோன் உரிமையாளர் யார்? வெளிநாட்டு கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #RedSandalwood


Tags:    

Similar News