செய்திகள்

சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்

Published On 2019-03-21 03:17 GMT   |   Update On 2019-03-21 06:34 GMT
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மரணம் அடைந்தார். #SulurMLA #MLAKanagaraj
சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் (64). இவரது வீடு சூலூர் அருகே உள்ள காம நாயக்கன் பாளையம் வி.மேட்டூர் சேர்மன் தோட்டத்தில் உள்ளது.

இன்று காலை கனகராஜ் எம்.எல்.ஏ. தனது வீட்டில் பத்திரிகை படித்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார்.



அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சூலூர் தொகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கனகராஜ் எம்.எல்.ஏ.வுக்கு ரத்தினம் என்ற மனைவியும் சண்முக சுந்தரம் என்ற மகனும், பாபா விஜயா என்ற மகளும் உள்ளனர். சூலூர் பகுதி மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் கனகராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொள்வார்.

விவசாய குடும்பத்தை சேர்ந்த கனகராஜ் கோழிப் பண்ணை நடத்தி வந்தார். தேங்காய் வியாபாரமும் செய்து வந்தார். 7-ம் வகுப்பு படித்துள்ள இவர் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். சுல்தான் பேட்டை ஒன்றிய செயலாளராக இருந்து உள்ளார். கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சூலூர் தொகுதியில் கனகராஜ் எம்.எல்.ஏ. தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சி. மனோகரனை விட 36 ஆயிரத்து 631 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அவர் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு-

கனகராஜ் (அ.தி.மு.க.)- 1,00,977

வி.எம்.சி. மனோகரன் (காங்கிரஸ்) - 64,346

மோகன் மந்திராசலம் ( பா.ஜனதா)- 13,517

தினகரன் (தே.மு.தி.க.)- 13,106

பிரிமியர் செல்வம் என்கிற காளிச்சாமி (கொ.ம.தே.க.) - 9,672

கனகராஜ் எம்.எல்.ஏ. மரணம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #SulurMLA #MLAKanagaraj
Tags:    

Similar News