செய்திகள்

புதுவை அருகே வாகன சோதனையில் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

Published On 2019-03-15 11:09 IST   |   Update On 2019-03-15 11:09:00 IST
புதுவை அருகே வாகன சோதனையில் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

சேதராப்பட்டு:

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதி முறைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டன.

வாக்காளர்களுக்கு மதுபானம், பரிசு பொருட்கள், பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க மாநில- மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அது போல் வானூர் சிறப்பு தேர்தல் படை பிரிவு அதிகாரி இளவரசன் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் நேற்று இரவு புதுவை அருகே மொரட்டாண்டி சுங்கச்சாவடி மையத்தில் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் உதவியோடு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அந்த காரில் 18 அட்டை பெட்டிகளில் வெள்ளி ஆபரண பொருட்கள் இருந்தன. இதையடுத்து காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெங்களூரை சேர்ந்த மகாவீர் மகன் ராகுல் (வயது 26) மற்றும் சென்னையை சேர்ந்த முகமது ஷேக் அலி (25) என்பதும், சென்னையில் வெள்ளி நகைக்கடை நடத்தி வரும் இவர்கள் வெள்ளி பொருட்களை புதுவையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் கொடுத்து விட்டு மீதி வெள்ளி பொருட்களை சென்னைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்தது. ஆனால், நகைகளை கொண்டு செல்லும் வாகனத்துக்கு ஆவணம் இல்லை.

இதையடுத்து வெள்ளி பொருட்கள் மற்றும் காரை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 19 கிலோ எடை கொண்ட இந்த வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சமாகும். #LSPolls

Tags:    

Similar News