செய்திகள்
பாளை மத்திய சிறை.

பாளை சிறையில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2019-03-09 10:22 GMT   |   Update On 2019-03-09 10:22 GMT
தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தை தடுக்க பாளை சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
நெல்லை:

பாளை மத்திய ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 1500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் செல்போன் போன்றவைகள் உள்ளதா? என்று அவ்வப்போது போலீசார் சோதனை நடத்துவார்கள்.

அதுபோல இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலில் நெல்லை மாநகர போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் சாம்சன் மேற்பார்வையில் பாளை உதவி கமி‌ஷனர் கோடிலிங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 போலீசார் அடங்கிய தனிக்குழுவினர் அதிகாலை 5 மணியளவில் பாளை மத்திய ஜெயிலுக்குள் சென்றனர்.

அங்கு அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினார்கள். கைதிகள் குளிக்கும் பகுதி, மணல் பாங்கான மைதானம் மற்றும் மரங்கள் பகுதியில் சல்லடை போட்டு அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது மத்திய ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருளும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து காலை 7 மணி அளவில் போலீசார் சோதனையை முடித்து கொண்டு திரும்பினர்.

இந்த சம்பவத்தை முன்னிட்டு பாளை மத்திய ஜெயில் பகுதியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



Tags:    

Similar News