செய்திகள்

பள்ளிகொண்டா அருகே கார் மீது சொகுசு பஸ் மோதி வாலிபர் பலி- 8 பேர் காயம்

Published On 2019-03-03 21:31 IST   |   Update On 2019-03-03 21:31:00 IST
பள்ளிகொண்டா அருகே இன்று அதிகாலை கார் மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேலூர்:

பெங்களூரு ஈரோஅல்லி முனீஸ்வரர் நகரை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 24). இவரும், இவரது நண்பர்கள் 4 பேரும் மேல்மலையனூர் செல்ல பெங்களூருவில் இருந்து நேற்றிரவு தங்களுக்கு சொந்தமான காரில் புறப்பட்டனர். காரை அனில்குமார் ஓட்டினார்.

இன்று அதிகாலை பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி அருகே வந்த போது வேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சொகுசு பஸ் கார் மீது மோதியது. இதில் கார் தூக்கி வீசப்பட்டது. காரை ஓட்டி வந்த அனில்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மேலும் அவருடன் வந்த நண்பர்கள் மல்லிகார்ஜூன் (24). அசோக் (23), ரகு(29), வினஸ்(23) ஆகிய 4 பேர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

பஸ்சில் பயணம் செய்தவர்களில் 4 பேர் காயமடைந்தனர். பஸ் டிரைவர் கோட்டீஸ்வரன் (24), மாற்று டிரைவர் பூபாலன் (33), பயணி மாதேஸ் (48), தனசேகர்(32) ஆகியோர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்த வாலிபரின் உடலை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 8 பேரையும் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News