தட்டப்பாறை கிராமத்தில் காளைவிடும் திருவிழாவில் மாடு முட்டி ஒருவர் பலி
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் காளைவிடும் திருவிழா நடைபெற்றது.
இதில் பங்கேற்க குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. அந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன.
பின்னர் தகுதி பெற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டதில் சீறிப்பாய்ந்து சென்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைவிடும் திருவிழாவில் மாடு முட்டியதில் குடியாத்தம் அடுத்த முக்குன்றம் ஊராட்சி காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னதுரை (வயது 55) பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சின்னதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் காளைவிடும் திருவிழாவில் 25 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. போட்டிகளையொட்டி அப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.