செய்திகள்
மோடிக்கு எதிராக போராட்டம்- வைகோ உள்பட 401 பேர் மீது வழக்கு
பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய வைகோ உள்பட 401 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #vaiko #pmmodi
வள்ளியூர்:
பிரதமர் மோடி நேற்று குமரி மாவட்ட வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். இதன்படி நேற்று நெல்லை-குமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு விலக்கில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஏராளமான ம.தி.மு.க.வினர் கருப்பு கொடி மற்றும் கருப்பு சட்டை அணிந்தபடி திரண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தொடங்கியதும் வைகோ திறந்த வேனில் நின்றபடி கருப்பு பலூன்களை பறக்க விட்டார்.
இதில் திரளான ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டார்கள். போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது கூட்டத்தில் ஒரு பகுதியில் இருந்து மர்மநபர்கள் சிலர் ம.தி.மு.க. தொண்டர்களை நோக்கி கற்களை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கற்கள் வீசப்பட்ட பகுதியை நோக்கி தொண்டர்கள் ஓடினார்கள். கல் வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ கோஷங்கள் எழுப்பினார். கல்வீசிய மர்மநபர்களை பிடிக்க போலீசாரும் ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கல்வீசியவர்களை உடனே கைது செய்யவேண்டும் என கோரி ம.தி.மு.க. தொண்டர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்தார். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க. வினரை கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக வள்ளியூர் போலீசார் வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் 401 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #vaiko #pmmodi