செய்திகள்
லெப்டினட் கர்னல் என்.தியாகராஜன் - மேஜர் ஜெனரல் ஆர்.கார்த்திகேயன்

உலக அரங்கில் இந்திய ராணுவத்தின் திறமை நிரூபிக்கப்பட்டுள்ளது - ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் புகழாரம்

Published On 2019-02-27 03:32 GMT   |   Update On 2019-02-27 03:32 GMT
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் உலக அரங்கில் இந்திய ராணுவத்தின் திறமையும், தகுதியும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் புகழாரம் சூட்டி உள்ளனர். #IAFAttack
சென்னை:

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய விமானப்படையின் பதிலடி தாக்குதலுக்கு சென்னையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 1962-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை ராணுவத்தில் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஆர்.கார்த்திகேயன் கூறியதாவது:-

காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு பல வாய்ப்புகளை இந்தியா வழங்கியது. ஆனால் அந்நாடு அதனை ஏற்காமல் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுவதுடன், புல்வாமா தாக்குதலை போன்று மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்துதான் ‘வருமுன் காப்போம்’ என்ற அடிப்படையில் விமானப்படை வான்வழி தாக்குதலை மிக நேர்த்தியாகவும், திறமையாகவும் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலை பெரிய அளவில் பார்க்க வேண்டும். தனிமைப்படுத்தி பார்க்கக்கூடாது. பாகிஸ்தானின் மோசமான செயல்களால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. எந்த வெளிநாட்டினரும் இதனை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் பயங்கரவாத செயலை அழிக்க ஆதரவு குரல் எழுப்பி உள்ளார். பொதுமக்களும் சாதி, மத உணர்வுகளை கடந்து அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் அணிவகுக்க வேண்டும். தாக்குதல் நடத்த அனுமதி அளித்த மத்திய அரசுக்கும், விமானப்படை மற்றும் ராணுவத்துக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனியாவது பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்காமல் இருப்பது நல்லது. தவறும் பட்சத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 1989-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற லெப்டினட்-கர்னல் என்.தியாகராஜன் கூறியதாவது:-

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பாலகோட், முசாபராபாத் மற்றும் சாக்கோட்டி ஆகிய இடங்களில் 12 மிரஜ் வகை விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனை வேகமாகவும் துல்லியமாகவும் தாக்கி அழிக்கும் செயல் (ரேபிட் ஆக்சன்) என்று கூறுவோம்.

தாக்குதல் நடத்தப்பட்ட பாலகோட்டில் பாகிஸ்தான் ராணுவ முகாமுக்கு மிக அருகில் அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன் 5½ ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த முகாமில் தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் பதுங்கி இருந்ததுடன், பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிடுதல், பயிற்சி அளித்தல் போன்றவை நடந்து வந்தது. இதில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பாகிஸ்தானை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

குறிப்பாக தாக்குதல் நடத்திய 3 இடங்களிலும் தலா ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் உலக அரங்கில் இந்திய ராணுவத்தின் திறமையும், தகுதியும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. மக்கள் இந்த செயலை வரவேற்க வேண்டும்.

மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் மிகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த தாக்குதலை அரசியல்ரீதியாக கொண்டு சென்று கொச்சைப்படுத்த கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்னல் பி.கணேசன் - லெப்டினட் ஜெனரல் பாபி மாத்யூஸ்

ஓய்வு பெற்ற லெப்டினட் ஜெனரல் பாபி மாத்யூஸ் கூறும் போது, ‘மத்திய அரசின் நடவடிக்கை சரியானது, பாராட்டுக்குரியது. இனிமேலாவது பாகிஸ்தான் அரசு இதுபோன்ற நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு பல முறை யோசனை செய்யும். இந்த தாக்குதலுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என்றார்.

ஓய்வு பெற்ற லெப்டினெட் கர்னல் ராஜன் ரவீந்திரன் கூறுகையில், ‘புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத முகாம்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நல்ல முயற்சி. அரசின் நடவடிக்கையை முழுமையாக வரவேற்கிறேன்’ என்றார்.

ஓய்வு பெற்ற கர்னல் பி.கணேசன் கூறியதாவது:-

பாகிஸ்தான் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் என்ற நாடே இல்லை. ஆனால் ஜம்மு-காஷ்மீர் நிலப்பகுதி இருந்தது. ஆனால் தற்போது ஜம்மு-காஷ்மீர் எங்கள் பகுதி என்று அந்த நாடு கூறுவதை அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார். அவர்களின் தேவையில்லாத நடவடிக்கையால் கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடந்தது. அதற்கு பிறகும் தொடர்ந்து மோசமான செயல்களில் அந்நாடு இறங்கி வருகிறது.

புல்வாமா தாக்குதல் ஏற்புடையது அல்ல. இதுபோன்ற தாக்குதலை அவ்வப்போது நடத்திவிட்டு நாங்கள் செய்யவில்லை என்று பாகிஸ்தான் கூறி வந்தது. சரியான நேரத்தில் சரியான பாடத்தை ராணுவம் புகட்டி உள்ளது. ராணுவ வீரர்களின் திறமை வெளிப்பட்டுள்ளது. இனியும் தேவையில்லாத நடவடிக்கையில் இறங்கினால் பெரிய இழப்பை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியது வரும். நாட்டு மக்கள் அனைவரும் ராணுவத்துக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #IAFAttack

Tags:    

Similar News