செய்திகள்

7 பேர் விடுதலை விவகாரம் - மனித சங்கிலி போராட்டத்தில் மதிமுக கலந்து கொள்ளாது

Published On 2019-02-25 10:34 GMT   |   Update On 2019-02-25 10:34 GMT
7 பேர் விடுதலைக்காக நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கவில்லை. நாங்கள் அதில் பங்கு கொள்ள மாட்டோம் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko
சென்னை:

நக்கீரன் கோபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது அவரை சந்திப்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு சென்றார்.

அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் துணை கமி‌ஷனர் அலுவலகம் முன்பு வைகோ தர்ணா போராட்டம் செய்தார்.

போலீசார் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 190, 290, 353 ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை எழும்பூர் 14-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அப்போது போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், எனவே வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றப்பத்திரிகையில் போலீசார் கூறியுள்ளனர்.

இதையடுத்து வைகோ கோர்ட்டில் ஆஜர் ஆக சம்மன் அனுப்பப்பட்டது. அதை ஏற்று எழும்பூர் கோர்ட்டில் வைகோ இன்று ஆஜர் ஆனார்.

அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பிறகு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலைக்காக ம.தி.மு.க. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. வழக்கு விசாரணைக்காகவும் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

இதன் தொடர்ச்சியாக 3 பேரின் தூக்கு தண்டனை ரத்தானது. எந்தெந்த வழிகளில் எல்லாம் 7 பேருக்காக நான் போராடினேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்போது தமிழ் ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியும் தமிழக கவர்னர் காலதாமதம் செய்து கொண்டே இருக்கிறார்.

இதற்கு மத்தியில் ஆளும் மோடி அரசே காரணம். தமிழக அரசும் அதற்கு துணை போகிறது.

தற்போது நடைபெற உள்ள மனிதசங்கிலி போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கவில்லை. நாங்கள் அதில் பங்கு கொள்ள மாட்டோம்.

இவ்வாறு வைகோ கூறினார்.

7 பேர் விடுதலைக்காக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வைகோ ஆதரவு தெரிவிக்க மறுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சென்னை எழும்புரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உயர்நிலைக் கூட்டம் நடந்தது. இதில் வைகோ பங்கேற்றார்.

கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. #MDMK #Vaiko

Tags:    

Similar News