செய்திகள்

திமுகவுடன் ஒன்று சேர்ந்து 40 தொகுதிகளிலும் வெல்வோம் - கே.எஸ்.அழகிரி

Published On 2019-02-03 06:43 GMT   |   Update On 2019-02-03 06:44 GMT
திமுகவுடன் ஒன்று சேர்ந்து 40 தொகுதிகளிலும் வெல்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். #Congress #KSAlagiri #DMK

பண்ருட்டி:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் மாற்றப்பட்டார். புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் காங்கிரஸ் கட்சியின் எளிய தொண்டனாக வாழ்ந்து வருகிறேன். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்து கவுரவித்துள்ளார். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை அடையாளம் கண்டு பெருந்தலைவர் காமராஜர் அமர்ந்த இடத்தில் என்னை அமர வைத்து இருக்கிறார்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி.

காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த கொள்கைகளை தூக்கி பிடித்து நிறுத்த வேண்டும் என்பதே எனது கொள்கை. மதசார்பற்ற கொள்கை, ஜனநாயக சோசலிசத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது, எளியவர்களுக்கும் அதிகாரத்தை வழங்கியது காங்கிரஸ் கட்சி.

 


மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டது காங்கிரஸ். இந்தியாவின் எல்லா பகுதிகளும் நன்றாக இருக்க வேண்டும். அந்த நோக்கம் நிறைவேற நான் பாடுபடுவேன்.

எனது உடனடி கடமை என்பது தமிழகம், புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என முன்னிறுத்தினார். அவருக்கு நன்றிக்கடன் செலுத்த கடமைபட்டுள்ளோம். தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற முன்னாள் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். சிறந்த வளர்ந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும். ஏழை-எளியோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி என்பது இயற்கையான கூட்டணியாகும். எனவே நாங்கள் தி.மு.க.வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். தி.மு.க.வுடன் ஒன்று சேர்ந்து தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடமும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடமும் மிகுந்த மதிப்பும், மரியாதையும், கருத்தொற்றுமையும் கொண்டிருந்தார். இதனால் தேர்தல்களில் அவர் காங்கிரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அதே பாணியில் இப்போது மு.க.ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் வேட்பாளராக ராகுலை, அவர் முன் மொழிந்தது நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே தி.மு.க.வுடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார். #Congress #KSAlagiri #DMK

Tags:    

Similar News