செய்திகள்

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கம் ஏன்?- பரபரப்பு தகவல்கள்

Published On 2019-02-03 11:05 IST   |   Update On 2019-02-03 11:05:00 IST
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை நீக்கியது ஏன்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. #Congress #RahulGandhi #Thirunavukkarasar #MKStalin
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட வேண்டும் என்று கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அதிருப்தி கோஷ்டியினர் வலியுறுத்தி வந்தனர். விரைவில் மாற்றப்படுவார் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் நேற்று திடீரென்று மாற்றப்பட்டுள்ளார்.

இது எதிர்பார்த்ததுதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டாலும் அவரது மாற்றத்துக்கு அவரது செயல்பாடுகளே காரணம் என்கிறார்கள்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக முழு நேர அரசியலில் இருந்து அனுபவம் பெற்ற திருநாவுக்கரசரால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவ்வளவு எளிதாக காய்களை நகர்த்த முடியவில்லை. அவர் நினைப்பது ஒன்று நடந்தது ஒன்று என்ற கதையிலேயே ஒவ்வொன்றும் நடந்தது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். முழுக்க திராவிட கொள்கைகளுடன் பயணித்து வந்த திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டது.

ஆனால் தனது அரசியல் அனுபவம், டெல்லி பழக்க வழக்கங்கள் மூலம் எதிர்ப்பாளர்கள் வாயை மூடினார்.

எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான திருநாவுக்கரசர் அ.தி.மு.க.வை விட்டு விலகிய போதும், தனிக்கட்சி தொடங்கிய நிலையிலும், பா.ஜனதா ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்த போதும் எம்.ஜி.ஆரை மறவாதவர்.

அந்த வகையில் காங்கிரஸ் தலைவராக இருந்த போது எம்.ஜி.ஆர். நினைவு நாளில் அவரது படத்தை சத்தியமூர்த்தி பவனில் வைத்து மரியாதை செலுத்தினார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை எற்படுத்தியது.

ஆனால் திருநாவுக்கரசரின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. காங்கிரசை பொறுத்தவரை தி.மு.க. ஆதரவாளர்கள், அ.தி.மு.க. ஆதரவாளர்கள் என்று இரு தரப்பும் உண்டு.

எனவே அ.தி.மு.க. ஆதரவு மனநிலை கொண்டவர்களை ஒருங்கிணைத்து தனது ஆதரவு வட்டத்தை பலப்படுத்திக் கொள்ள திட்டமிட்டார்.



இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்களை நீக்கி விட்டு புதிய மாவட்ட தலைவர்களை நியமித்தார். அப்போதே இளங்கோவனுக்கும், திருநாவுக்கரசருக்கும் இடையேயான யுத்தம் தொடங்கி விட்டது.

திருநாவுக்கரசரரை பதவியில் இருந்து இறக்கியே தீர்வது என்று இளங்கோவன் ஆதரவாளர்கள் போர்க்கோலம் பூண்டனர்.

இது தவிர காங்கிரஸ் கூட்டங்களில் முன்னாள் தலைவர்களுக்கு பேச வாய்ப்பு தருவதில்லை, குறித்த நேரத்தில் வருவதில்லை. காங்கிரஸ் கொள்கைகளை பிரபலபடுத்துவதில்லை என்ற அதிருப்தியும் கட்சிக்குள் உருவெடுத்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு தி.மு.க. தலைமைக்கு திருநாவுக்கரசர் மீது கோபத்தை ஏற்படுத்தியது.

மு.க.ஸ்டாலின் கூட்டிய கூட்டங்களுக்கு பெரும்பாலும் 2-ம் கட்ட தலைவர்களை திருநாவுக்கரசர் அனுப்பி வந்ததும் தி.மு.க. தலைமைக்கு எரிச்சல் ஊட்டியது.

சொந்த கட்சிக்குள் எதிர்ப்பு, கூட்டணி கட்சியான தி.மு.க.விலும் அதிருப்தி என்ற நிலையிலும் திருநாவுக்கரசர் தனது முதிர்ந்த அரசியல் அனுபவத்தால் காய்களை வேறுவிதமாக திருப்பினார்.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை சாதகமாக்கி புதிய பாதையை ஏற்படுத்தினார். தி.மு.க.- அ.தி.மு.க. அல்லாத ஒரு கூட்டணிக்கான வடிவத்தை உருவாக்கினார்.

காங்கிரஸ், டி.டி.வி. தினகரன், பா.ம.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை இணைத்து புதிய கூட்டணிக்கான வேலையை தொடங்கினார். திரைமறைவில் நடந்த இந்த கூட்டணி பற்றி டெல்லி தலைமையில் விவாதித்த போது அவர்களும் அதை ஏற்கும் மனநிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக்கு வர முடியாமல் இருக்கும் காங்கிரஸ் இந்த புதிய கூட்டணி மூலம் தமிழகத்தில் நிச்சயம் வலுவான இடத்தை பிடிக்கும் என்று கருதினார்கள்.

இந்த நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் தரப்பில் இருந்து டெல்லிக்கு தூது விட்டனர்.

விடுதலை சிறுத்தைகளை இணைத்தால் பா.ம.க. வெளியேறி விடும் என்ற தகவல் டெல்லிக்கு தெரிவிக்கப்பட்டது.

வட மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு செல்வாக்கு இருப்பதால் பா.ம.க.வை விட முடியாது என்ற நிலையில் விடுதலை சிறுத்தைகளை காங்கிரசோடு இணைத்து விடும்படி ஆலோசனை கூறி இருக்கிறார்கள். ஆனால் அதை விடுதலை சிறுத்தைகள் ஏற்கவில்லை. தேசம் காப்போம் மாநாட்டுக்கு வாருங்கள் எங்கள் பலத்தை பாருங்கள் என்று கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள்.

டெல்லியில் நகர்த்தப்பட்ட இந்த நகர்வுகளை கேள்விப்பட்டு தி.மு.க. தலைமை அதிர்ந்தது. தங்களுக்கே வேட்டா என்று தி.மு.க. தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கியது.



கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய போவதாக காங்கிரஸ் மேலிடத்தில் தெரிவித்தது. இதன் அடிப்படையில்தான் அழைப்பிதழில் பெயர் இல்லாமல் இருந்தும் திடீரென்று ராகுலும் வந்தார்.

இதையடுத்து காங்கிரஸ்- தி.மு.க. இடையேயான உறவு பலமானது. ஏற்கனவே திருநாவுக்கரசர் மீது அதிருப்தியில் இருந்த தி.மு.க.வின் கோபமும் டெல்லியில் சுழன்றது. உட்கட்சி எதிர்ப்பு சேர்ந்து கொண்டதால் திருநாவுக்கரசர் எதிர்ப்பு சூறாவளியில் சிக்கி தலைமை பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வட்டாரத்தில் இந்த தகவல் பரபரப்பாக பேசப்படுகிறது. #Congress #RahulGandhi #Thirunavukkarasar #MKStalin

Similar News