பெருந்துறை அருகே காதல் விவகாரத்தில் மில் தொழிலாளி தற்கொலை
பெருந்துறை:
பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் துணி தயாரிக்கும் மில்லில் வேலை பார்த்து வந்தவர் குமார் (வயது 22). இவர் அந்த மில்லில் மொத்த வியாபாரம் செய்ய வரும் வியாபாரிகளை வரவேற்கும் ஊழியராக பணி புரிந்து வந்தார்.
குமாரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மோதூர் ஆகும். பெருந்துறை அருகே காசிபில்லாம் பாளையத்தில் ஒரு ரூமில் வாடகைக்கு தங்கி வேலைக்கு போய் வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் தான் தங்கி உள்ள அறையில் குமார் திடீரென விஷம் குடித்து விட்டார். பிறகு தனது நண்பர் சிவசங்கரன் என்பவருக்கு போன் செய்து ‘‘நான் விஷம் குடித்து விட்டேன் மில் ரோட்டில் நின்று கொண்டிருக்கிறேன்... உடனே வா’’ என்று கூறினார்.
இதை கேட்டு திருக்கிட்ட சிவசங்கரன் விரைந்து வந்தார். அங்கு வாந்தி எடுத்து கொண்டிருந்த குமாரை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட குமார் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. அது தான் காரணமா? அல்லது வேறு என்ன காரணம்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.