செய்திகள்

ஈரோட்டில் கடன் கேட்டு நெருக்கடி - லாட்ஜில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-02-01 15:44 IST   |   Update On 2019-02-01 15:44:00 IST
ஈரோட்டில் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லாட்ஜில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, மையேரிப்பட்டி, நாதன் காடு பகுதியை சேர்ந்தவர் ராமர் மகன் சண்முகம் (வயது32). சண்முகம் பூலாம்பட்டியில் ஆட்டோ மொபைல்ஸ் கடை வைத்து நடந்து வந்தார்.

இந்நிலையில் சண்முகம் கடந்த 28-ந் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விட்டு சென்றார். ஆனால் அதற்கு பின் அவர் வீடு திரும்பவில்லை. திடீரென அவர் மாயமானார்.

நேற்று மதியம் சண்முகத்தின் தந்தை ராமருக்கு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் இருந்து தொலை பேசி வந்தது. அதன் பேரில் ஈரோட்டில் உள்ள தனியார் லாட்ஜிக்கு ராமர் வந்தார்.

அப்போது லாட்ஜ் முன்னால் அவரது மகன் மோட்டார்சைக்கிள் இருந்தது. பின்னர் சண்முகம் தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் பதில் வரவில்லை. மேலும் அந்த அறையில் இருந்த துர்நாற்றம் வீசியது.

இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு சண்முகம் வி‌ஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் அறையை சோதனை செய்தனர். அப்போது சண்முகம் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில் எனது நண்பர்களான கார்த்திக், வசந்த் ஆகியோரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். அதை திருப்பி செலுத்த போதிய அவகாசம் எனது நண்பர்கள் தரவில்லை.

மேலும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தான் மன உளைச்சல் அடைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாகவும், என் சாவுக்கு காரணம் எனது நண்பர்கள் தான் என்றும் சண்முகம் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் கார்த்தி, வசந்த ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Similar News