செய்திகள்

திருமண ஆசைகாட்டி பெண் ஊழியர் கற்பழிப்பு- கடை உரிமையாளர் கைது

Published On 2019-01-26 17:24 IST   |   Update On 2019-01-26 17:24:00 IST
நாகர்கோவிலில் திருமண ஆசைகாட்டி பெண் ஊழியரை கற்பழித்த கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி கனகமூலம், புதுத்தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது21). நாகர்கோவில் மணிமேடை பகுதியில் சந்தோஷ் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 18 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்தார்.

இந்த பெண்ணுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் பெண்ணின் தாயார் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாயார், கர்ப்பத்திற்கான காரணம் பற்றி கேட்டார். அப்போது கடை உரிமையாளர் தன்னை திருமண ஆசைக்காட்டி கற்பழித்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து பெண்ணின் தாயார் நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் செய்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் மணிமேடையில் உள்ள கடையில் வேலை பார்த்த போது கடையின் உரிமையாளர் சந்தோஷ் என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் என்னை அனந்தன் நகர் பகுதியில் உள்ள அவரது நண்பரின் அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் அடிக்கடி என்னை அங்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். எனவே என்னை திருமணம் செய்யுமாறு கூறினேன். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

இது பற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கடையின் உரிமையாளர் சந்தோசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

Tags:    

Similar News