செய்திகள்

பழவேற்காடு டாஸ்மாக் கடையில் ஒரே நாளில் குவிந்த ‘குடி’மகன்கள்

Published On 2019-01-18 10:15 GMT   |   Update On 2019-01-18 10:15 GMT
பழவேற்காடு பஜாரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ‘குடி’மகன்கள் படையெடுத்தனர். இதனால் மதுக்கடை திறப்பதற்கு முன்னரே அப்பகுதியில் கடும் கூட்டம் நிலவியது.
பொன்னேரி:

காணும் பொங்கல் விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடற்கரை, பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.

இதேபோல் பழவேற்காடு ஏரி பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பழவேற்காடு பஜாரில் இருந்து கடற்கரைக்கு செல்ல சுமார் ஒரு மணி நேரம் ஆனது.

சுற்றுலா வந்த ‘குடி’மகன்கள் பழவேற்காடு பஜாரில் உள்ள டாஸ்மாக் கடைக்கும் படையெடுத்தனர். இதனால் மதுக்கடை திறப்பதற்கு முன்னரே அப்பகுதியில் கடும் கூட்டம் நிலவியது.

மதியம் 12 மணி அளவில் மதுக்கடை திறக்கப்பட்டதும் அவர்கள் மதுபாட்டில் வாங்க ஒரே நேரத்தில் முண்டியடித்தனர். இதனால் ‘குடி’மகன்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுக்கடை ஊழியர்கள் மதுபாட்டில் கொடுக்க முடியாமல் திணறினர். ஏராளமான குடிமகன்கள் நெரிசலில் சிக்கி மதுபாட்டில்களை வாங்கிய உற்சாகத்தில் ஆர்ப்பரித்து சென்றனர். சிலர் மதுபாட்டில் வாங்குவதற்காக சுமார் ½ மணி நேரம் வரை காத்திருந்தனர்.

குடிமகன்கள் திரண்டதால் அந்த மதுக்கடையில் இருந்த அனைத்து மதுபாட்டில்களும் விற்றுத் தீர்ந்தது. இதையடுத்து தங்களுக்கு பிடித்தமான மதுவகையை வாங்க சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மெதூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கும் சென்றனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் மது விற்பனை ரூ. 500 கோடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News