செய்திகள்

பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் - அண்ணாமலையார் ஆன்மிக குழு ஏற்பாடு

Published On 2019-01-09 11:56 GMT   |   Update On 2019-01-09 11:56 GMT
ஒட்டன்சத்திரம் அருகே வருகிற 19-ந்தேதி பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அண்ணாமலையார் ஆன்மிக குழு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை:

அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பார்வதி தேவியிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கிய தினமான தைப்பூசம் திருவிழா வருகிற 21-ந்தேதி முருகன் தலங்களில் கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள முருகன் தலங்களில் தைப்பூசம் விழா பழனியில் மிக கோலாகலமாக கொண்டாடப்படும்.

தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் தைப்பூசத்தை முன்னிட்டு விரதம் இருந்து காவடியை சுமந்தபடி பாத யாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆண்டுக்கு ஆண்டு பாத யாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

அப்படி செல்லும் பக்தர்களின் பசியை போக்குவதற்காக வழிநெடுக ஏராளமானோர் குடிநீர், பிஸ்கட் பாக்கெட், பழ வகைகள் போன்றவற்றை தானமாக கொடுப்பது உண்டு. சில அமைப்புகள் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்குகிறார்கள்.

சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு கடந்த 8 ஆண்டுகளாக பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது 9-வது ஆண்டாக அன்னதானம் வழங்க அந்த குழுவினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் சன்னதி அருகே உள்ள எல்.என். திருமண மண்டபத்தில் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) அன்னதானம் நடைபெறுகிறது. இதற்காக அந்த திருமண மண்டபத்தில் “பழனி முருகன் அன்னதான குடில்” அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு 18-ந்தேதி மாலை பக்தி இன்னிசை, கூட்டு வழிபாடு ஆகியவற்றுடன் அன்னதானம் தொடங்குகிறது.

19-ந்தேதி காலை 9 மணிக்கு மகாசக்தி பூஜை, வேல் பூஜை, வேல்மாறல் பாராயணம் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து காலை 10 மணி வரை பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். மதியம் 12 மணியில் இருந்து பக்தர்களுக்கு வாழை இலையில் அன்னதானம் வழங்கப்படும்.

அன்னதான குடில் பகுதியில் பக்தர்களுக்கு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அன்னதான சேவையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பொருள் உதவி, நிதி உதவி செய்யலாம் என்று அண்ணாமலையார் ஆன்மிக குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நிதி உதவி செய்ய இயலாத பக்தர்கள் அன்னதான சேவையில் பங்கேற்று தங்களால் முடிந்த பணிகளை செய்யலாம். இந்த சேவையில் விருப்பம் உள்ள பக்தர்கள் 99443 09719, 98421 98889 எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம்.

Tags:    

Similar News