செய்திகள்

பிளாஸ்டிக் தடையை எதிர்த்து விக்கிரமராஜா தலைமையில் முற்றுகை போராட்டம் - 5 ஆயிரம் வியாபாரிகள் கைது

Published On 2019-01-08 15:41 IST   |   Update On 2019-01-08 15:41:00 IST
பிளாஸ்டிக் தடையை எதிர்த்து விக்கிரமராஜா தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற 5 ஆயிரம் வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதிப்பு, அதனை பயன்படுத்தும் வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல், அபராத நடவடிக்கை எடுக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் இன்று சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகில் வியாபாரிகள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்அப்துல்லா, மண்டல தலைவர் ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் வி.பி. மணி, பாண்டிய ராஜன், மாவட்ட தலைவர் அயனாவரம் சாமுவேல், என்.டி. மோகன், ஆதிகுருசாமி, ஜெயபால், அம்பத்தூர் காஜிமுகமது, கொளத்தூர் ரவி, ஆவடி அய்யாத்துரை, தேசிகன், சின்னவன், ஆர். எம்.பழனியப்பன், சுப்பிர மணியன், கே.ஏ.மாரியப்பன், அருணாசலமூர்த்தி, எம்.பி. ரமேஷ், சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் குவிந்தனர்.

அங்கிருந்து பேரணியாக சட்டசபை நோக்கி புறப்பட்டு சென்றனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் வியாபாரிகள் அனைவரையும் போலீசார் தடுத்து கைது செய்தனர்.

முன்னதாக விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

பிளாஸ்டிக் தயாரிக்கின்ற வியாபாரிகளை அரசு அழைத்து பேச வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து அனுப்பும் பிஸ்கட், சாக்லெட் போன்ற தின்பண்டங்களில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு விற்க அனுமதிக்கப்படுகிறது.

அதே பிளாஸ்டிக் பொருட்களை உள்ளூர் வியாபாரிகள் உபயோகப்படுத்தினால் அரசு பறிமுதல் செய்து அபராதம் விதிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு நியதி, உள்ளூர் வியாபாரிகளுக்கு ஒரு நியதியா?

எனவே அரசு இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கு உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தொடர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News