செய்திகள்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அப்பல்லோ மருத்துவர்களின் வாக்குமூலம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது

Published On 2018-12-28 22:49 GMT   |   Update On 2018-12-28 22:49 GMT
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எங்கள் மருத்துவர்களின் வாக்குமூலம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளது. #Jayalalithaadeath #ApolloHospital
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் தனது வாக்குமூலத்தை ஒரு மனுவாக தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களில் பலர் பலமுறை ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 3 ஆயிரம் பக்கத்துக்கும் மேற்பட்ட ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களை அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்து ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்திக்கொள்ள தமிழக அரசிடம் ஆணையம் அனுமதி கோரியது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்திக்கொள்ள ஆணையத்துக்கு அனுமதி அளித்தது. இருந்தபோதிலும் மருத்துவ நிபுணர்கள் குழுவை ஆணையம் ஏற்படுத்தவில்லை.

தவறாக பதிவு செய்யப்படுகிறது

இதனால் ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடைமுறைகள், மருத்துவ உண்மைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளிக்கும்போது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியது உள்ளது. இதன் காரணமாக அப்பல்லோ மருத்துவர்களின் வாக்கு மூலத்தை ஆணையம் பதிவு செய்யும்போது ஏராளமான தவறு ஏற்படுகிறது.

மருத்துவம் தொடர்பான வார்த்தைகளை தமிழில் மொழியாக்கம் செய்யும்போது தவறாக புரிந்து கொண்டு பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்று வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது மருத்துவ சிகிச்சை தொடர்பான உண்மைகள் தவறாக எடுத்துக்கொள்ளப்படும்.



அப்பல்லோ மருத்துவமனையில் 21 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மூலம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, 21 துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் மட்டுமே ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய முடியும். அதுவே சரியானதாகவும் இருக்கும்.

இந்த துறைகளில் இருந்து ஒரே ஒரு மருத்துவரேனும் ஆணையம் அமைக்கும் குழுவில் இடம்பெறவில்லை எனில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தவறான கருத்தை ஆணையம் பதிவு செய்யும் நிலை ஏற்படும்.

அதேபோன்று மருத்துவக்குழுவில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களை போன்று கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்களாகளோ அல்லது அதைவிட அதிக கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்களாகவோ இருக்க வேண்டியது அவசியமாகும்.

உலக அளவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டால் ஜெயலலிதாவுக்கு உலக அளவில் தரம்வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை கண்டறிய முடியும். எனவே, உடனடியாக மருத்துவக்குழுவை ஏற்படுத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் அப்பல்லோ நிர்வாகத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#Jayalalithaadeath #ApolloHospital
Tags:    

Similar News