செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் செல்ல தனித்தனி வழி

Published On 2018-12-27 02:41 GMT   |   Update On 2018-12-27 04:45 GMT
சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்கு வாகனங்கள் வந்து செல்ல தனித்தனி வழிகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. #ChennaiAirport
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் தற்போது உள்நாட்டு முனையம் வழியாக வந்து பன்னாட்டு முனையம் வழியாக வெளியேற வேண்டும். விரைவாக சென்றால்தான் சுங்க கட்டணம் இல்லாமல் இலவசமாக செல்ல முடியும் என்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்துக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் அமைத்து சோதனை அடிப்படையில் வாகனங்களை இயக்கியதில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் இன்று காலை 11 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, பன்னாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் திரிசூலம் ரெயில் நிலையம் எதிரே உள்ள தற்போதைய வெளியேறும் பாதை வழியாக உள்ளே வந்து, விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள பாதை வழியாக வெளியேற வேண்டும்.


உள்நாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள பாதை வழியாக உள்ளே வந்து, தற்போது உள்ள நுழைவு வாயில் வழியாக வெளியேற வேண்டும்.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களின் புறப்பாடு பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு வாகனங்கள் உடனடியாக சென்றுவிடவேண்டும். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களின் வருகை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்ல வரும் வாகனங்கள் அதற்கான வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி, ஏற்றிச்செல்ல வேண்டும்.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களின் நுழைவு பகுதி முகப்புகளில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். வாகனங்கள் வந்து செல்ல 10 நிமிட இலவச நேரம் தொடர்ந்து அமலில் இருக்கும்.

இந்த புதிய நடைமுறைக்கு பயணிகள், வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டு உள்ளது. #ChennaiAirport
Tags:    

Similar News