கள்ளக்குறிச்சி அருகே மொபட்டில் சென்ற திருநங்கை கார் மோதி பலி
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலி காமராஜர்நகரை சேர்ந்தவர் இளையராணி. இவரது வளர்ப்பு மகள் ரமணா (வயது 19), திருநங்கை.
இவர் நேற்று மாலை மொபட்டில் இந்திலி கிராமத்தில் இருந்து டவுன் பகுதிக்கு புறப்பட்டார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஒரு வளைவில் திரும்பினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று ரமணா ஓட்டி சென்ற மெபட் மீது மோதியது. பின்னர் அருகில் உள்ள பாலத்திலும் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ரமணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பாலத்தில் கார் மோதியதில் அதன் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. விபத்து ஏற்பட்டதும் காரில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விபத்தில் இறந்த ரமணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.