செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி

Published On 2018-12-18 13:59 GMT   |   Update On 2018-12-18 13:59 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனிமூட்டம் அதிகமானதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
விழுப்புரம்:

மார்கழி மாதம் பிறந்தாலே பனிப்பொழிவும், கடும் குளிரும் அதிகமாக இருக்கும். நேற்று முன்தினம் மார்கழி மாதம் பிறந்தது.

இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே பனியின் தாக்கமும், கடுங்குளிரும் அதிகம் உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு சாரல் மழை போல் தூறியது. இன்று காலை 5 மணிக்கு அதிகளவில் பனி கொட்டியது. இதனால் சாலையின் இருபுறமும் சென்ற வாகனங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த பனிப்பொழிவு காலை 8 மணி வரை காணப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றன. பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

இந்த பனிப்பொழிவு விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கள்ளக்குறிச்சி, ஆசனூர், மடப்பட்டு, திருக்கோவிலூர், எலவநாசனூர்கோட்டை, சின்னசேலம் உள்பட பல இடங்களில் காணப்பட்டது.

விழுப்புரம் பகுதிகளில் வந்த ரெயில்கள் அனைத்தும் இன்று காலை 8 மணி வரை முகப்பு விளக்கை எரிய விட்டப்படியே வந்தன. #tamilnews
Tags:    

Similar News