செய்திகள்

பழனி கோவில் சிலை மோசடி வழக்கு - பொன்மாணிக்கவேல் 10 நாள் விசாரிக்க திட்டம்

Published On 2018-12-14 05:47 GMT   |   Update On 2018-12-14 05:47 GMT
பழனி கோவில் சிலை மோசடி வழக்கை 10 நாட்கள் நேரடியாக விசாரிக்க உள்ளதாக ஐஜி பொன்மாணிக்கவேல் கூறினார். #PonManickavel

பழனி:

பழனி முருகன் கோவிலில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான நவபாஷான சிலை உள்ளது. இந்த சிலை சேதமடைந்ததாக கூறி புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு இந்த சிலை செய்ததில் மோசடி நடந்ததாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா, ஸ்தபதி முத்தையா உள்பட பலர் இதில் சிக்கினர்.

இது மட்டுமின்றி நகை மதிப்பீட்டாளர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தனர். தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஐம்பொன் சிலை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மோசடி வழக்கை விசாரித்து வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதனால் சிலை மோசடி வழக்கில் தொடர்புடைய பலர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் அவரது பணி காலத்தை ஓராண்டு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் நேற்று உறுதி செய்தது. இதனையடுத்து பழனி கோவிலுக்கு நேற்று இரவு  ஐஜி பொன்மாணிக்கவேல் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


பழனி முருகன் கோவிலில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு விசாரணை ஒரு டி.எஸ்.பி. தலைமையில் நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக நடந்த இவ்வழக்கில் எவ்வித விசாரணையும் நடைபெறாமல் இருந்தது. விரைவில் அந்த வழக்கை நானே நேரடியாக விசாரணை நடத்த உள்ளேன்.

பழனியில் 10 நாட்கள் வரை தங்கி இருந்து இதில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிலை மோசடி வழக்கில் பல அதிகாரிகள் இன்னும் சிக்கவில்லை என பக்தர்களும், பொதுமக்களும் தெரிவித்து வந்தனர். விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றதால் இனி இந்த வழக்கு எப்படி நடக்குமோ? என்ற அச்சமும் பக்தர்களிடையே நிலவியது.

மேலும் சிலை மோசடி குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அதிகாரிகள் மட்டுமின்றி கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

சிலை மோசடியில் மூளையாக செயல்பட்ட நபரை நெருங்கும் சமயத்தில் வழக்கு விசாரணை தொய்வு ஏற்பட்டது. தற்போது தானே நேரடியாக விசாரணை நடத்த உள்ளேன் என தெரிவித்திருப்பது மோசடி வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.  #PonManickavel

Tags:    

Similar News