செய்திகள்

அதிரை- மல்லிப்பட்டினத்தில் கடல்நீர் உள்வாங்கியது- நாகையில் கடல் சீற்றம்

Published On 2018-12-13 15:09 GMT   |   Update On 2018-12-13 15:09 GMT
அதிரை மற்றும் மல்லிப்பட்டினத்தில் கடல்நீர் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நாகையில் இன்று காலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

பட்டுக்கோட்டை:

கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், சேது பாவா சத்திரம், மல்லிப் பட்டினம் ஆகிய கடலோர மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமானது. கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீனவர்கள் மீள முடியாமல் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடலோர மாவட்டங்களில் 15-ந் தேதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே நேற்று பிற்பகலில் அதிராம்பட்டினம், சேதுபாவா சத்திரம், மல்லிபட்டினம் ஆகிய பகுதிகளில் கடல்நீர் திடீரென உள்வாங்கியது.

அதிராம்பட்டினம் மற்றும் ஏரிப்புறக்கரை சுமார் 150 மீட்டர் வரை கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வழக்கத்துக்கு மாறாக கடல், குளம்போல் அமைதியாக இருந்தது.

அதேநேரத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் 100 மீட்டர் வரை கடல்நீர் உள் வாங்கி இருந்தது.

இதகுறித்து அதிராம்பட்டினம் மீனவர் சங்கர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம் பட்டினத்துக்கு இப்போது தான் மின்சாரம் வந்துள்ளது. தற்போது மேலும் ஒரு புயல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். மேலும் கடல் காற்று மாலை நேரத்தில் வேகமாக வீசும். ஆனால் கடல் காற்று இல்லாமல் அமைதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நாகையில் இன்று காலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கோடியக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Tags:    

Similar News