செய்திகள்

கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கலப்படத்தை தடுக்கவே முடியாது- ஐகோர்ட் கருத்து

Published On 2018-12-12 10:31 GMT   |   Update On 2018-12-12 10:33 GMT
கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கலப்படத்தை தடுக்க முடியாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #HighCourt
சென்னை:

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் கலப்படம் பாலை விற்பனை செய்வதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். இதையடுத்து அமைச்சருக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‘தனியார் நிறுவனங்கள் கலப்படம் செய்யப்பட்ட பாலை விற்பனை செய்வதாக அமைச்சரே கூறுவதால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை கடந்த முறை விசாரித்தபோது, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேரில் ஆஜராகி, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 23 பேருக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.


இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், அறிக்கையில் உள்ள விவரங்கள் அனைத்தும் அரைகுறையாக உள்ளது. பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது அபராதம் மட்டும் ஏன் விதிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், 2018ம் ஆண்டில் வெறும் 42 பால் மாதிரி மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பால் விற்பனைக்கு எத்தனை பேர் உரிமை பெற்றுள்ளனர்? கலப்படம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் நிலை என்ன? முடிவடைந்த வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள தண்டனை விவரங்கள் என்ன ? இதுவரை எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? போன்ற விவரங்களை அறிக்கையாக வருகிற 21ந்தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், ‘கலப்படத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்காவிட்டால், கலப்படத்தை தடுக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், புலன் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #HighCourt
Tags:    

Similar News