செய்திகள்

பிப்ரவரி இறுதியில் 20 தொகுதி தேர்தல்- அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

Published On 2018-12-05 07:00 GMT   |   Update On 2018-12-05 07:13 GMT
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. #ElectionCommission #TNElections
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது.

இதே போல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதனால் தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. காலியான 6 மாதத்துக்குள் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் கமி‌ஷன் விதி.

இதனால் 5 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தகுதி நீக்க வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து யாரும் அப்பீல் செய்யவில்லை. அப்பீல் செய்ய கால அவகாசம் ஜனவரி 25-ந்தேதி வரை உள்ளது. இதனால் 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் அந்த தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் திருவாரூர் தொகுதி மட்டுமே தேர்தல் அறிவிப்புக்கு சாதகமாக இருந்தது.

ஆனால் தேர்தல் நடைபெறும் காலத்தில் புயல் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டு இருந்ததால் இதனை காரணம் காட்டி தமிழக அரசு அளித்த அறிக்கையால் திருவாரூர் தேர்தல் அறிவிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது.

20 தொகுதி இடைத்தேர்தல் குறித்து முன்பு இருந்த தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஓ.பி.ராவத் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில் ஓ.பி. ராவத் ஓய்வு பெற்றதை அடுத்து கடந்த ஞாயிற்றுகிழமை சுனில் அரோரா புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக பொறுப்பேற்றார். அவர் பதவி ஏற்றதும் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளின் நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அறிக்கை கேட்டு இருந்தார். அவரும் விரிவான அறிக்கை ஒன்றை டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில், திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பது குறித்தும் 18 தொகுதி உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து இதுவரை யாரும் அப்பீல் செய்யாதது குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் இருந்தும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தப் பணிகள் முடிந்த பின்புதான் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும்.

அதன் பிறகே தமிழக அரசு தேர்தல் கமி‌ஷனுக்கு அறிக்கை அளிக்கும் அல்லது தேர்தல் நடத்தும் சூழ்நிலை உள்ளதா என்று தமிழக அரசிடம் தேர்தல் கமி‌ஷன் அறிக்கை கேட்டு பெறும். அதன் அடிப்படையில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.


இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறுகையில், “18 தொகுதி காலியிடம் தொடர்பாக சட்டசபை செயலாளரிடம் விளக்கம் கேட்டு பெற்று டெல்லி தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து யாரும் அப்பீல் செய்யவில்லை. இதற்கான அவகாசம் ஜனவரி 25-ந்தேதி வரை உள்ளதால் அதுவரை பொறுத்து இருப்போம்” என்றார்.

இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டு கிளையில் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில், பிப்ரவரி இறுதிக்குள் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்திருந்தார். எனவே பிப்ரவரி இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந் தேதி முடிந்ததும் தெரிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. #ElectonCommission #TNElections

Tags:    

Similar News