செய்திகள்

திருவாரூரில் கனமழை: தேங்கி கிடக்கும் மழை தண்ணீரால் மக்கள் அவதி

Published On 2018-11-29 11:54 GMT   |   Update On 2018-11-29 11:54 GMT
திருவாரூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததால் மழைநீர் தேங்கி நின்றது. இதை கடந்து செல்ல முடியாமல் பெண்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.

திருவாரூர்:

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பெய்து வரும் கனமழையால் அவதிப்பட்டு வருகிறார்கள். புயலால் வீடுகளை இழந்த மக்கள் , வீட்டு சுவரும் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பரிதவிப்பில் உள்ளனர்.

கடந்த 21-ந் தேதி பெய்த மழையில் பட்டுக்கோட்டை சிவகொல்லையில் வீட்டு சுவர் இடிந்து 4 பேர் பலியானார்கள். இதனால் சேதமான வீட்டு சுவரால் வீட்டில் தங்க முடியாமல் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவாரூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.

இந்த மழையால் திருவாரூர் நகராட்சி 30-வது வார்டு பகுதியான சாப்பாவூரில் குளம்போல் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்ல முடியாமல் பெண்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.

திருவாரூருக்கு வர வேண்டும் என்றால் தியானபுரம், விளமல் வழி யாக சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டும். இதனால் சாப்பாவூர் கிராம மக்கள், தங்களது பகுதியில் ஏணி வைத்து இறங்கி மழை தண்ணீரில் நடந்து செல்கிறார்கள்.

திருவாரூர்- தஞ்சை ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பெய்த மழையால் எங்களது குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது மாற்று ஏற்பாடாக ஏணி வைத்து அதில் இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் குளம் போல் உள்ள தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News