செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2018-11-26 00:04 GMT   |   Update On 2018-11-26 00:04 GMT
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #heavyrain #MeteorologicalCenter
சென்னை:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. சென்னையை பொறுத்தமட்டில் கடந்த 2 தினங்களாக மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி வானம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் பருவ காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தமட்டில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தற்போதைய நிலவரப்படி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகளோ, புயலுக்கான அறிகுறியோ எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக பூதப்பாண்டி, மன்னார்குடியில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

இதையடுத்து அம்பாசமுத்திரத்தில் 4 செ.மீ. மழையும், பாபநாசம், தக்கலை, மேட்டுப்பாளையம், இரணியல், மணிமுத்தாறு, குளச்சலில் தலா 2 செ.மீ. மழையும், நீடாமங்கலம், சாத்தான்குளம், மதுக்கூர், வேடசந்தூர், நிலக்கோட்டை, சேரன்மகாதேவி, ஓட்டப்பிடாரம், திருக்காட்டுப்பள்ளியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.  #heavyrain #MeteorologicalCenter
Tags:    

Similar News