செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் 45 ஏரிகள் நிரம்பின

Published On 2018-11-24 06:30 GMT   |   Update On 2018-11-24 06:30 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 916 ஏரிகளில் 45 ஏரிகள் 100 சதவீதமும் நிரம்பி உள்ளன. #Rain #Lakes
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 916 ஏரிகள் உள்ளன. இவை அனைத்தும் நீர் இன்றி வறண்டு காணப்பட்ட நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர் வரத் தொடங்கியுள்ளது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 916 ஏரிகளில் 45 ஏரிகள் 100 சதவீதமும் நிரம்பி உள்ளன. 52 ஏரிகளில் 75 சதவீமும், 179 ஏரிகளில் 50 சதவீதமும் மீதமுள்ள ஏரிகளில் 25 சதவீதம் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான தாமல் ஏரி, தென்னேரி ஏரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, மணிமங்கலம், மானாம்பதி, மதுராந்தகம் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்கள் இதுகுறித்து கூறுகையில், மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தால் ஏரிக்கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் வரும் அபாயம் உள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலவீனமாக உள்ள ஏரிக்கரைகள், மதகுகள், நீர்வரத்து கால்வாய் போன்றவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  #Rain #Lakes

Tags:    

Similar News