செய்திகள்

கள்ளக்குறிச்சி ஜவுளிக்கடையில் தீ விபத்து- ரூ.2 லட்சம் சேதம்

Published On 2018-11-12 13:28 GMT   |   Update On 2018-11-12 13:28 GMT
கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள துணிகள் தீயில் கருகி சேதமடைந்தது.

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் அப்துல் சலாம் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென இவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் அலறியடித்து கொண்டு கடையில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

பின்னர் ஜவுளி கடையில் பற்றி எரிந்த தீயை கடை ஊழியர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மள மள வென பற்றி எரிய தொடங்கியது. தீயை அணைக்க முடியவில்லை.

பின்னர் இது குறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதை தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் உள்ள ரூ.2 லட்சம் மதிப்பிலான துணிகள் தீயில் கருகி சேதமடைந்தது.

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யபட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மின்கசிவு காரணமாக ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

Tags:    

Similar News