செய்திகள்

திமுக செயலாளர் கொன்று புதைப்பு- உறவினர்கள் சாலை மறியல்

Published On 2018-10-25 10:42 GMT   |   Update On 2018-10-25 10:42 GMT
திண்டுக்கல்லில் பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் திமுக செயலாளர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #DMK
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையை சேர்ந்த தம்பிராஜ் மகன் பாலசுப்பிரமணியன் (வயது26) இவர் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் சிறுமலை தென்மலை 8-வது வார்டு தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார்.

இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வான்மதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்போது பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள பொன்னகரத்தில் வசித்து வந்தார்.

கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலசுப்பிரமணி வீடு திரும்பவில்லை. அவரது மனைவி தனது கணவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தனது கணவரின் செல்போனில் இருந்து ஒரு குறுந்தகவல் மட்டும் வந்திருந்தது. தான் வெளியூர் செல்வதாகவும் 2 நாட்களில் வீட்டிற்கு வந்துவிடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சந்தேகம் அடைந்த வான்மதி இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் பணம் பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பரே கொன்று தனது ஆலையில் புதைத்திருந்தது தெரிய வந்தது.

பாலசுப்பிரமணியன் பணிபுரிந்த அதே அலுவலகத்தில் பாரதிபுரத்தை சேர்ந்த கார்த்தி (26) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் ஆடிட்டிங் வேலையை ஒருவருக்கு செய்து முடித்து ரூ.50 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தை கார்த்திக் வாங்கிக்கொண்டு சில நாட்கள் கழித்து ரூ.25 ஆயிரம் பங்கு தொகையை தருவதாக கூறி உள்ளார். ஆனால் அதனை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். கார்த்திக்கு சொந்தமான நூற்பாலை பொன்னகரத்தில் உள்ளது.

சம்பவத்தன்று தனது பங்கு தொகையை பாலசுப்பிரமணியன் கேட்க சென்ற போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி தனது நண்பர் என்றும் பாராமல் பாலசுப்பிரமணியன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். பின்னர் தனது ஆலையின் ஓரத்திலேயே குழி தோண்டி புதைத்து விட்டார். இந்த விவரம் தெரிய வரவே தாலுகா போலீசார் கார்த்தியை பிடித்து கிடுக்கி பிடி விசாரணை நடத்தினர்.

மேலும் கொலை செய்யப்பட்ட பாலசுப்பிர மணியனின் உடலை தோண்டி எடுக்கவும் முடிவு செய்தனர். ஆர்.டி.ஓ. ஜீவா, தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் இன்று உடல் தோண்டி எடுத்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் காலை 9 மணி வரை அதிகாரிகள் மற்றும் போலீசார் யாரும் வராததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொலை செய்து உடலை தனது ஆலையிலேயே புதைத்திருப்பதால் இச்சம்பவத்தில் மேலும் சில நபர்கள் தொடர்பு இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #DMK
Tags:    

Similar News