செய்திகள்

திருவாரூர் அரசு கல்லூரி மாணவர்கள் 300 பேர் மீது போலீசார் வழக்குபதிவு

Published On 2018-10-17 05:46 GMT   |   Update On 2018-10-17 05:46 GMT
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் அரசு கல்லூரி மாணவர்கள் 300 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
திருவாரூர்:

திருவாரூர் அருகே கடாரம் கொண்டான் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் வசதி வேண்டி பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு மாணவர் மாரிமுத்து தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை போராட தூண்டியதாக மாரிமுத்துவை கல்லூரியில் இருந்து நீக்கி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதனை கண்டித்து நேற்று திருவாரூர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திருவாரூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடாரம் கொண்டான் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை ஒட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 100 மாணவர்கள் 200 மாணவிகள் உட்பட 300 பேர் மீது இன்று திருவாரூர் தாலுகா போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாணவர்கள் காவல்துறை அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக மாணவர்கள் செயல்படுதல் என 3 பிரிவுகளில் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News