செய்திகள்

அந்தியூர் அருகே மது விற்ற 2 பேர் கைது - 100 மது பாட்டில்கள் பறிமுதல்

Published On 2018-10-03 23:04 IST   |   Update On 2018-10-03 23:04:00 IST
அந்தியூர் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தியூர்:

காந்தி பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இதை பயன்படுத்தி அந்தியூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் அந்தியூர் பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்த ஓட முயன்றார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ‘அவர் அந்தியூர் தேர் வீதியை சேர்ந்த சங்கர் (வயது 37) என்பதும், அவர் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சங்கரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அந்தியூர் கருமலையான் கோவில் பகுதியில் மது விற்றதாக அந்தியூர் புதுக்காடு பகுதியை சேர்ந்த சின்னதம்பி (42) என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News