செய்திகள்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நீதிபதி ஆய்வு

Published On 2018-09-25 07:23 GMT   |   Update On 2018-09-25 07:23 GMT
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் ஆய்வு செய்தார். கோயில் வளாகம் பராமரிப்பு குறித்து அவர் பார்வையிட்டார். #VeeraraghavaPerumalTemple
திருவள்ளூர்:

தமிழக அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில், பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி, கோயில் வளாகம் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு நடத்த வேண்டும்.

வரும் 30ம் தேதிக்குள் இதற்கான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி அகோபில மடத்துக்கு சொந்தமான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் ஆய்வு செய்தார். அப்போது கோயில் வளாகம் பராமரிப்பு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் எச்சரிக்கை அலாரம், ஊழியர்களின் வருகை பதிவேடு, வரவு செலவு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை நேரில் பார்வையிட்டார்.

கோயிலின் முன்பாக உள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த நீதிபதி, ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் சிலரிடம் கோயிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் நீதிபதி செல்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 752 திருக்கோயில்கள் உள்ளன. இதில் ஏற்கெனவே திருவேற்காடு, திருத்தணி உள்ளிட்ட கோயில்களில் ஆய்வு செய்துள்ளோம்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்திற்கு வரும் 29ம் தேதிக்குள் அறிக்கை அனுப்பி வைக்க இருக்கிறோம்.

இவ்வறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தேவஸ்தான மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத், தேவஸ்தான ஊழியர்கள் உடன் இருந்தனர். #VeeraraghavaPerumalTemple

Tags:    

Similar News