செய்திகள்

அண்ணாநகர், அரும்பாக்கம் பகுதியில் கார்-மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறித்த கும்பல்

Published On 2018-09-24 09:24 GMT   |   Update On 2018-09-24 09:24 GMT
அரும்பாக்கத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறித்த 2 வாலிபர்கள், கார்-மோட்டார் சைக்கிளில் சென்று அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
போரூர்:

அரும்பாக்கம், அண்ணா நகர், திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன.

கொள்ளையர்களை பிடிக்க அண்ணாநகர் உதவி கமி‌ஷனர் குணசேகர், இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ஜெகதீசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

அவர்கள் நகைபறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சுற்றும் ஒரே வாலிபர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கொள்ளையர்களின் உருவ படத்தை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் நடந்து சென்ற ஒரு வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறித்து சென்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் விரட்டி பிடித்தனர்.

அவர்கள் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சபி பாஷா, அண்ணாநகரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரிய வந்தது. மேலும் அண்ணாநகர், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர்.

போலீசாரிடம் அவர்கள் கூறும் போது, “மோட்டார் சைக்கிளில் வந்து செயினை பறித்தவுடன் உடனடியாக சற்று தூரத்தில் காரில் காத்திருக்கும் கூட்டாளிகளிடம் அதை கொடுத்துவிட்டு தப்பி சென்றுவிடுவோம். பின்னர் அவர்களிடம் பணம் பெறுவோம். கார், மோட்டார் சைக்கிளில் சுற்றி நோட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்தோம்” என்றனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி கூட்டாளியான பெரம்பூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமாரை கைது செய்தனர். கைதான 3 பேரிடமும் இருந்து 40 பவுன் நகை, கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News