செய்திகள்

பெண்களிடம் சங்கிலி பறித்த புகைப்பட கலைஞர் கைது - 30 பவுன் நகைகள் மீட்பு

Published On 2018-09-17 16:15 GMT   |   Update On 2018-09-17 16:15 GMT
சமயபுரம் அருகே பெண்களிடம் சங்கிலி பறித்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
சமயபுரம்:

திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் லால்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலவாளாடி, வாளாடி, புறத்தாக்குடி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தனியாக நடந்து சென்ற பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக 2 போலீஸ் நிலையங்களிலும் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நபரை பிடிக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்படி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நேற்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூர் பிரிவு ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் திருச்சி அண்ணாசாலை கைலாஷ்நகர் 3-வது கிராசை சேர்ந்த சுப்பையா மகன் சுரேஷ்குமார்(வயது 34) என்பதும், புகைப்பட கலைஞரான அவர் சொந்தமாக கேமரா வைத்து திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்து கொடுக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. அந்த தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில், ஆடம்பரமாக வாழ நினைத்த அவர் குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களாக தனியாக சென்ற பெண்களிடம் தங்க சங்கிலிகளை பறித்து சென்றதும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க நம்பர் பிளேட் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதும், விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 30 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் அவரை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட புகைப்பட கலைஞரை கைது செய்த இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான தனிப்படை போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். 
Tags:    

Similar News