செய்திகள்

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்த பெண் கைது

Published On 2018-09-08 06:47 GMT   |   Update On 2018-09-08 06:47 GMT
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#arrest

போரூர்:

சென்னை விருகம்பாக்கம் நாராயணசாமி முதல் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மனைவி சங்கீதா.சங்கீதா கடந்த வாரம் விருகம்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

விருகம்பாக்கம் தாங்கல் தெருவைச் சேர்ந்த ஜோதி என்பவர் மகளிர் சுயஉதவி குழு மூலம் எனக்கு அறிமுகமானார்.

இந்நிலையில் ஜோதி தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறார் என்றும் அவர் மூலம் திருவள்ளூர் அத்திப்பட்டு செல்லியம்மன் நகரில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு பெற்று தருவதாக கூறினார்.

இதை நம்பி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் நானும் மற்றும் அப்பகுதியில் உள்ள பெண்கள் சுமார் 20 பேர் சேர்ந்து ரூபாய் 15 லட்சம் பணத்தை ஜோதியிடம் கொடுத்தோம் ஆனால் சொன்னபடி வீடுகள் ஒதுக்கீடு பெற்று தராமல் பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து எங்களை அலைகழிப்பு செய்து வந்த ஜோதி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீடீரென தலைமறைவானார்.

ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான ஜோதி போரூரை அடுத்த கெருகம்பாக்கம் பாய் கடை பகுதியில் வீடு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்த போலீசார் அவரது நண்பரான பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தலைமைச் செயலக ஊழியர் சாரதி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News