செய்திகள்

தமிழகத்தில் அதிக அளவில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை - ஜப்பான் குழுவினர் பாராட்டு

Published On 2018-09-01 02:55 IST   |   Update On 2018-09-01 02:55:00 IST
தமிழகத்தில் அதிகளவில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பது பாராட்டுக்கு உரியது என்று ஜப்பான் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

ஜப்பான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் கென்ஜி அயா தலைமையிலான குழுவினர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகளின் செயல்பாட்டினை களஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியை சர்வதேச தரத்திற்கு உயர்த்திட அனைத்து உதவிகளையும் ஜப்பான் அரசு தொடர்ந்து வழங்கும் என உறுதியளித்தனர். பின்னர், இக்குழுவினருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜப்பான் குழுவினர் பேசியதாவது:-

அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் நர்சுகளின் அர்ப்பணிப்புடன் கூடிய தன்னலமற்ற சேவை எங்களுக்கு நெகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் தாய்-சேய் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் அடையவேண்டிய நிலையான வளர்ச்சி இலக்குகளை தமிழகம் 14 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்து இமாலய சாதனை புரிந்துள்ளது.

அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் செயல்படுத்தப்பட்டுவரும் தாய்ப்பால் வங்கித் திட்டம் புரட்சிகரமான திட்டமாகும். தமிழக அரசின் சீரிய திட்டங்களால் அதிகளவில் ஏழை எளிய மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் தரமான சிகிச்சை பெற்றுவருவது பாராட்டுக்குரியது. ஜப்பான் அரசு, தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எல்லாவித ஒத்துழைப்பையும் நல்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News