செய்திகள்

போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் -வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2018-08-29 16:35 GMT   |   Update On 2018-08-29 16:35 GMT
போக்குவரத்து போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் காரர் வெங்கடேஷ் (வயது 33). இவர், ஈ.சி.ஆர். சாலை கொக்கு பார்க் சிக்னலில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது சாரம் அன்னை தெரசா நகரை சேர்ந்த சார்லஸ் (44). கொக்கு பார்க் சாலை ஒருவழிப்பாதையில் வந்தார். அவரை வெங்கடேஷ் மறித்து இது ஒரு வழிபாதை, இந்த வழியாக வரக்கூடாது என்று கூறினார்.

ஆனால், சார்லஸ் அப்படித்தான் வருவேன் என்றார். உடனே வெங்கடேஷ் சாவியை எடுத்துக்கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் அழைத்து சென்றார்.

அவர் இது குறித்து விசாரணை நடத்தி அவருக்கு ரூ.100 அபராதம் விதித்தார். சார்லஸ் சாவியையும், அபராதத்துக்கான ரசீதையும் வாங்கிக்கொண்டு மறுபடியும் ஒருவழிப்பாதையில் சென்றார்.

இதை வெங்கடேஷ் தடுத்தார். இதனால் தகாத வார்த்தையால் சார்லஸ் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் வெங்கடேஷ் காலில் சார்லஸ் மோட்டார் சைக்கிளை ஏற்றியதில் அவர் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து வெங்கடேஷ் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வடிவழகன் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சார்லசை தேடி வருகிறார்கள்.

இதேபோல் வில்லியனூர் போலீசாருக்கு புதுவை கண்ட்ரோல் அறையில் இருந்து ஒரு தகவல் வந்தது.

அதில், ஒதியம்பட்டு ரோடு கணுவாப்பேட்டை பகுதியில் வாலிபர்கள் ஒரு கும்பலாக கூடி இருப்பதாக தகவல் கொடுத்தனர். உடனடியாக வில்லியனூர் போலீஸ்காரர் புருஷோத்தமன் அப்பகுதிக்கு சென்று வாலிபர்களை கலைந்து செல்லும்படி கூறினார்.

அதில், செங்கதிர் செல்வன் என்பவர் புருஷோத்தமனை தகாத வார்த்தையால் திட்டி சட்டையை கிழித்து விடுவதாக கூறினார்.

இதுகுறித்து அவர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News