செய்திகள்

கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் வீரா நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Published On 2018-08-28 23:18 GMT   |   Update On 2018-08-28 23:18 GMT
இந்திய கடலோர காவல் படையின் நவீன ரோந்து கப்பல் ‘வீரா’ சென்னை அருகே நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
சென்னை:

இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்களை தயாரித்து வழங்கும் பணியில் சென்னை அருகே காட்டுப்பள்ளியில் உள்ள எல்.அண்ட்.டி. கப்பல் கட்டும் தளம் ஈடுபட்டு வருகிறது. அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட 3-வது நவீன ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடந்தது.

இந்த கப்பலை இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கூடுதல் இயக்குனர் ஜெனரல் கே.ஆர்.நாட்டியால், அவரது மனைவி சுனிதா நாட்டியால் இருவரும் நாட்டுக்கு அர்ப்பணித்தனர். அந்த கப்பலுக்கு ‘வீரா’ என்றும் பெயர் சூட்டினர்.

பின்னர் கூடுதல் இயக்குனர் ஜெனரல் நாட்டியால் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தின்கீழ், இந்திய கடலோர காவல் படைக்கு தேவை யான 7 ரோந்து கப்பல்கள் தயாரிக்கும் பணி காட்டுப்பள்ளியில் உள்ள எல்.அண்ட்.டி. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதுவரை 3 ரோந்து கப்பல்கள் தயாரித்து அளித்துள்ளனர். தற்போது 3-வது கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

முதல் ரோந்து கப்பலான விக்ரம் சென்னையில் நடந்த ராணுவ கண்காட்சி தொடக்க விழாவின்போது கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பலை உருவாக்க 2½ ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்டனர். 2-வது கப்பல் அதைவிட குறைந்த காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது ‘வீரா’ ரோந்து கப்பல் 21 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பணிகளில் இந்த கப்பல் ஈடுபடுத்தப்படும். நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் வரை பயணம் செய்யமுடியும்.

எத்தகைய சூழ்நிலையிலும் இந்த கப்பலை இயக்க முடியும். இதில் 14 அதிகாரிகளுடன் மொத்தம் 102 வீரர்கள் பயணம் செய்யும் வசதி உள்ளது. இதன் ஆயுள் காலம் 25 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி. பரமேஷ்வரன், எல்.அண்ட்.டி. நிறுவன நிர்வாக இயக்குனர் கண்ணன், நிர்வாக தலைவர் அரவிந்தன் உள்பட கடலோர காவல் படை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News