செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் மனு

Published On 2018-08-28 12:09 GMT   |   Update On 2018-08-28 12:09 GMT
மறைமுகமாக திறக்க முயற்சிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய், தோல்நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். பின்னர் ஆலை மூடப்பட்டது.

இந்த ஆலை மீண்டும் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது. தற்போது மூளை சலவை செய்யப்பட்டு அப்பாவி மக்கள் மூலம் ஆலையை திறக்க கோரி போலியாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மறைமுகமாக ஆலையை திறப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. எனவே இந்த ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை திறக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களை திரட்டி ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதில் துணை செயலாளர் பாலன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன், கோட்டாளமுத்து, அம்மா பேரவை செயலாளர் பிரபாகரன், ஓட்டுனர் அணி இணை செயலாளர் முத்துமாலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News