செய்திகள்

நிதி நிறுவனம் முன்பு தற்கொலை மிரட்டல் விடுத்த ஸ்தபதி

Published On 2018-08-27 11:51 GMT   |   Update On 2018-08-27 11:51 GMT
கும்பகோணத்தில் கட்டிய பணத்தை தராததால் நிதி நிறுவனம் முன்பு ஸ்தபதி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த நாககுடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சண்முகவேல். ஸ்தபதியான இவர் கும்பகோணம் மாதப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் ஏலச்சீட்டுக்கு சேர்ந்திருந்தார்.

இவருக்கான ஏலச்சீட்டு ரூ.5 லட்சம். இதில் இதுவரை சண்முகவேல் ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 750 கட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த 8.5.2018-ல் அவருக்கு ரூ. 3 லட்சம் சீட்டு விழுந்துள்ளது. ஆனால் அவருக்கு அந்த பணத்தை நிதிநிறுவனம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பணத்தை கொடுக்காமல் இவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வேதனையடைந்த சண்முகவேல் மீண்டும் நிதி நிறுவனத்துக்கு சென்று நான் கட்டிய ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 750 திருப்பி தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

பின்னர் நிதி நிறுவனம் சண்முகவேலுக்கு ரூ.97 ஆயிரத்து 750-க்கான காசோலையை வழங்கியுள்ளது. இதனை அவர் வங்கியில் சென்று போட்டுள்ளார். ஆனால் காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் இன்று காலை நிதி நிறுவனம் முன்பு பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்வதாக மிரட்டினார். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சண்முகவேலை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News