செய்திகள்

வத்தலக்குண்டுவில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் மது பாட்டில்கள் பறிமுதல்

Published On 2018-08-25 11:55 GMT   |   Update On 2018-08-25 11:55 GMT
வத்தலக்குண்டு பகுதியில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 180 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வத்தலக்குண்டு:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணிக்குதான் திறக்க வேண்டும். ஆனால் வத்தலக்குண்டு பகுதியில் டாஸ்மாக் கடை பார்களில் பணியாற்றும் ஊழியர்கள் மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து குடிமகன்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி சேவைகளை வழங்கி வருகின்றனர்.

கூடுதல் விலைக்கு விற்ற போதும் மதுவுக்கு அடிமையான தொழிலாளர்கள் காலை முதலே டாஸ்மாக் கடைகளில் விழுந்து கிடக்கின்றனர். மேலும் குடிபோதையில் பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் ஆங்காங்கே அரை நிர்வாண கோலத்தில் படுத்து விடுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சட்ட விரோதமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் வத்தலக்குண்டு நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் டாஸ்மாக் கடை பார்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 180 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் மது பதுக்கிய சகோதரர்கள் உள்பட 4 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News