செய்திகள்

கோத்தகிரி டானிங்டனில் வீட்டின் கேட்டில் சிக்கிய கரடியால் பரபரப்பு

Published On 2018-08-25 06:56 GMT   |   Update On 2018-08-25 06:56 GMT
கோத்தகிரி டானிங்டனில் இன்று அதிகாலை வீட்டின் கேட்டில் கரடியின் தலை சிக்கி கொண்டது. இதனால் அதிகாலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கொலக்கம்பை, தூதூர்மட்டம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ளனர்.

இன்று அதிகாலை டானிங்டன்னை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது வீட்டு முன்பு ஒரு பெண் கரடி 2 குட்டிகளுடன் வந்தது. அந்த கரடிகள் கேட் வழியாக வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டில் இருந்து வெளியேற முயன்ற போது 2 குட்டிகளில் ஒரு கரடி குட்டியின் தலை கேட்டில் சிக்கி கொண்டது.

தலை வெளியே வராததால் கரடி சத்தம் போட்டது. குட்டி வரமுடியாமல் தவித்ததால் தாய் கரடி மற்றொரு குட்டியுடன் அங்கேயே நின்று கொண்டு இருந்தது.

கரடியின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு குட்டியுடன் நின்று கொண்டு இருந்த தாய் கரடியை தீ பந்தம் கொளுத்தி காட்டுக்குள் விரட்டினர். பின்னர் கேட்டில் சிக்கிய குட்டி கரடியை மீட்டு காட்டுக்குள் கொண்டு சென்று விட்டனர்.

இதனால் அதிகாலையில் டானிங்டன்னில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News