செய்திகள்

பண்ருட்டியில் 2-வது நாளாக 100 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்- போலீஸ் குவிப்பு

Published On 2018-08-21 12:12 GMT   |   Update On 2018-08-21 12:12 GMT
பண்ருட்டியில் 2-வது நாளாக 100 ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செட்டிப்பட்டறை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மாவட்டத்தின் 2-வது பெரிய ஏரியாகும்.

இந்த ஏரியில் கடந்த 30 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. மேலும் கரும்பு, நெல் போன்ற விவசாய பயிர்கள் பயிரிடும் இடங்களாகவும் மாற்றம் செய்து பயிரிடப்பட்டு இருந்தன.

இந்த ஆக்கிரமிப்பால் செட்டிப்பட்டறை ஏரிக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுநல அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் சிவராமன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் 3 பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை வரை ஆக்கிரமிப்பு பணி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் தொடர்ந்தனர்.

இன்று 100 வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டன. மேலும் கரும்பு, நெல் பயிர்களும் அழிக்கப்பட்டன.

இதையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News