செய்திகள்

திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண் கற்பழிப்பு- வடமாநில வாலிபர் கைது

Published On 2018-08-16 09:35 GMT   |   Update On 2018-08-16 09:35 GMT
நந்தம்பாக்கம் அடுத்த மனப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

நந்தம்பாக்கத்தை அடுத்த மனப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், புனேவை சேர்ந்த சசிகாந்த் சிவாஜி (38) என்பவருக்கும் இணைய தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது.

நாளுக்கு நாள் இந்த தொடர்பு தீவிரமானது. அந்த இளம் பெண்ணும் சசிகாந்த் சிவாஜியும் வியாபாரம் தொடர்பாக பேசிக்கொண்டனர். இந்த நிலையில் சசிகாந்த் சிவாஜியை சந்திக்க இந்த இளம்பெண் புனே சென்றார்.

இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் நெருங்கிப் பழகினார்கள். வாலிபர் சசிகாந்த் சிவாஜி தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அந்த பெண் இருந்தார்.

இந்த நிலையில், அந்த பெண்ணை வற்புறுத்தி சசிகாந்த் சிவாஜி பலமுறை உறவு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் மனப்பாக்கத்துக்கு திரும்பினார்.

சில தினங்களில் அங்கு வந்த சசிகாந்த் சிவாஜி அந்தபெண்ணின் வீட்டில் தங்கினார். இருவரும் கணவன்-மனைவி போல இருந்து வந்தனர்.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தி வந்தார். இந்த நிலையில், சசிகாந்த் சிவாஜி திடீர் என்று அவருடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

இதனால் பதட்டம் அடைந்த அந்த பெண் புனே சென்று வாலிபர் சசிகாந்த் சிவாஜியை சந்தித்தார். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சென்னை திரும்பினார். நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், “சசிகாந்த் சிவாஜி திருமண ஆசை காட்டி தன்னை கற்பழித்து விட்டதாகவும், வியாபாரம் செய்வதாக கூறி ரூ.10 லட்சம் ரூபாயை தன்னிடம் இருந்து வாங்கி மோசடி செய்து விட்டதாகவும்“ கூறி இருந்தார்.

இதையடுத்து, கடந்த 6-ந் தேதி போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் மோகன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. அவர்கள் புனே சென்று மணப்பாக்கம் பெண்ணை ஏமாற்றி கற்பழித்த வடமாநில வாலிபர் சசிகாந்த் சிவாஜியை கைது செய்தனர்.

சென்னை கொண்டு வரப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அவரை கைது செய்து கொண்டு வந்த தனிப்படை போலீசாரை, துணை கமி‌ஷனர் முத்துசாமி ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
Tags:    

Similar News