செய்திகள்

உயர்நீதிமன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்த வேண்டாம் - முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த தலைமை நீதிபதி

Published On 2018-08-06 10:18 GMT   |   Update On 2018-08-06 10:18 GMT
உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்த வேண்டாம் என முதலமைச்சருக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். #IndiraBanerjee #MadrasHighCourt
சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது. விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘உயர்நீதிமன்றத்தில் நடக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்த வேண்டாம் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். நிதி ஒதுக்குவது நிறுத்தப்படாது என முதல்வர் நம்பிக்கையுடன் உறுதியளித்தார். யாரிடமும் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்காத நான், இதற்காக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன்” என்றார்.



முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை  சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

கடந்த 2002-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, பின்னர் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee #MadrasHighCourt
Tags:    

Similar News